தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருந்த தமிழினத்தை சிங்கள இனவாதம் பிரிக்க சதி செய்கின்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் இது தொடர்பான அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
2 லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ஒரு இனப் படுகொலையை நிகழ்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலில் படுகொலை செய்ததுடன் இன்று தங்களுக்குள்ளேயே முரண்பட சதியில் ஈடுபடும் இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்துக்குரியது.
தமிழக மீனவர்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழ மீனவர்கள் மீது ஒருநாளும் தாக்குதல் தொடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயலை அறிவோடும், தெளிவோடும் அணுக வேண்டும்.
தமிழக மீனவர்கள்தான் ஈழ மீனவர்களை தாக்கி விட்டார்கள் என்று பரப்புரை செய்வது, தமிழக மீனவர்களின் படகுகளை ஈழ மீனவர்களுக்கு ஏலத்தில் விற்பது தமிழக மீனவர்களுக்கும் ஈழ மீனவர்களுக்குமிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தவே.
தமிழர் தாயகம் எப்போதெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அப்போதெல்லாம் தமிழகம் கொதித்து எழுந்து தங்கள் உறவுகளுக்கு உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது . இந்த உணர்வை, உறவை சீர்குலைக்க பேரினவாத அரசு மேற்கொள்ளும் சதிவலையில் சிக்காது அமைதி காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.