காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை மக்கள் அசௌகரியம், கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதைச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடம்பெறாமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதை வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்து உள்ளமையால் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த மூன்று தினங்களாக பாதைச் சேவையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்திய தினமும் பயணம் செய்கின்றனர். இதன்போது படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.