கொலை செய்தவர்களைக் கைதுசெய்வதுடன் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி சடலத்தினை வீதியில் வைத்து போராட்டம்!
கடந்த புதுவருட தினத்தன்று பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த குணம் கார்த்திக்(26) எனும் இளைஞன் பரந்தன் சந்தியில் கும்பல் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டதுடன் மற்றொரு இளைஞன் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலத்துடன் வீதியில் திரண்ட மக்கள் கொலை செய்தவர்களைக் கைது செய்யவும் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் போக்குவரத்தினை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபர்களின் விபரங்களை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தும் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படவில்லை எனவும் இதற்கு முன்னர் பரந்தனில் நிகழ்ந்த கேதீஸ்வரன் என்பவரது கொலை தொடர்பிலும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஒரு குழுவினரே ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரிடம் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொலை, வாள்வெட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி என பரந்தனில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தன் வர்த்தக சங்கத்தினரால் நேற்றைய தினம் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்மை குறிப்பிடத்தக்கது.