வன்முறைக் குழுவினரை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தனில் கடையடைப்பு!
பரந்தன் பகுதியில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தன் வர்த்தக சங்கத்தினரால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலை, வாள்வெட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி என பரந்தனில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கடையடைப்பினை மேற்கொள்வதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வன்முறை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஒரு குழுவினரே ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவில்லை என வர்த்தக சங்கத்தினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.