காணாமல் போன பதின்ம வயதுச் சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடந்த 16.03.2022 அம்பலவன்பொக்கணையில் உள்ள மாலை வகுப்புக்கு சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை. தேடியதில் அவர்கள் மாலை நேர வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. என சிறுமிகளின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ( 18) புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் நடமாடிய இரண்டு சிறுமிகளையும் மீட்ட பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் குறித்த இளைஞன் மட்டக்களப்பிற்கு வருமாறு அழைத்ததால் மாலை வகுப்பிற்கு செல்வதாகக் கூறி நன்பியையும் அழைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேரூந்தில் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி சென்ற சிறுமிகளை காரில் அழைத்துச் சென்று வீடொன்றில் தங்கி பேஸ்புக் ஊடாக பழக்கமாகிய சிறுமியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் இரண்டு சிறுமிகளையும் அழைத்துவந்து யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.
இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் பேரூந்து தரிப்பிடத்திற்கு வந்த போது இரவாகியுள்ளது. அங்கிருந்த வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்ற போது இரவாகியதால் உதவி செய்வதாக கூறி உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற கடை உரிமையாளர் வீடொன்றில் வைத்து மற்றய சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரண்டு சிறுமிகளையும் முல்லைத்தீவு பேரூந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் இறங்கிய சிறுமிகள் நடமாடித் திரிந்த நிலையில் சந்தேகத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண இளைஞர்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.