‘பிள்ளைகளுக்கு 3நாளாக உணவில்லை’ விரக்தியில் தந்தை தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!
“மூன்று நாட்களாக உணவு சமைப்பதற்கு வீட்டில் எதுவுமே இருக்கவில்லை பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தேடி வருவதாக கூறி அவர் வீட்டிலிருந்து சென்றார் எனினும் அவர் திரும்பி வரவில்லை இதையடுத்து வீட்டிலிருந்த இரண்டு கதிரைகளை விற்பனை செய்துவிட்டு பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத கவலையில் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் நாகராஜா ரஞ்சனின் மனைவியான மாடசாமி மஞ்சுளா.
களுத்துறை வெலிபன்ன பகுதியைச் சேர்ந்த 37 வயதான நாகராஜா ரஞ்சன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. “எங்களுக்கு திருமணம் முடித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. 12 வயதுக்கு குறைவான நான்கு பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்களும் ஒரு மகளும். நாங்கள் தெமுவத்த மற்றும் நெபட ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தொழில் தேடி வெலிபன்ன பகுதிக்கு வந்தோம். கணவருக்கு நிரந்தரத் தொழில் இல்லை, கூலித் தொழில் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்க்கையை கொண்டு நடத்தினோம், 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாடகைக்கு பெற்றுக்கொண்ட அறை ஒன்றிலேயே வாழ்ந்து வந்தோம்.
நிரந்தர பதிவு இல்லாமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக் கூட முடியவில்லை. கடந்த மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் கணவர் மன வேதனையில் இருந்தார் பிள்ளைகளுக்கு ஏதாவது கொண்டு வருகிறேன் என கூறி சென்றார். ஆனால் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது நானும் எனது பிள்ளைகளும் தனித்துவிட்டோம்.
பிள்ளைகள் சிறுவர்கள் என்பதால் எனக்கு வேலைக்கு செல்ல முடியாது. எனது பிள்ளைகள் மேலும் நிர்க்கதியாகி விட்டார்கள்” எனவும் அவர் விவரித்துள்ளார் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.